Cholaraja Temple (Nagercoil)

India / Tamil Nadu / Nagercoil / Kommandai amman kovil street, Temple

Temple
Nearby cities:
Coordinates:   8°11'31"N   77°26'8"E

Comments

  • சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த பழம்பெருமை கொண்ட குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன்கோவில் என்ற பெயருள்ள இன்றைய நகரப் பகுதிகள் அனைத்தும் கோட்டாறு என்ற ஒரே பெயரில் அமையப் பெற்றிருந்ததாயும், நாகராஜா கோவில் நகரின் நடுப்பகுதியில் அமைந்த பின்னர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் நாகர் கோவில் என்ற பெயர் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.நாகர்கோவில் நகரத்தின் நுழைவாயிலாக அமைந்து புகழ் சேர்க்கும் பழையாறு ஆற்றங்கரையருகில் அரவ நீள்சடையான் என்ற பெயரில் சிவபெருமான் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாகர்கோவில் நகரின் கிழக்கு எல்லையில் பழையாற்றின் கரைக்கு மேற்குக் கரையை ஒட்டி அமைந்துள்ள ஒழுகினசேரி என்ற பெயரில் உள்ள ஊரில் கிழக்குப்பார்த்து இக்கோயில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் உலகமுழுதுடையான் சேரி என்று அழைக்கப்பட்டுள்ளது. பெயர்க்காரணம்: கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தின் பகுதிகள் சேர மன்னரின் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தை ஆண்ட ராஜராஜ சோழனின் பேரனும், ராஜேந்திர சோழனின் மகனுமான ராஜேந்திர சோழீஸ்வரன் சேர நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையிலிருந்து படைகளுடன் சென்று நாகர்கோவிலில் தங்கியுள்ளான். அன்று மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, அங்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்தார். இறைவனின் ஆணைக்குட்பட்டு, மன்னன் உடனடியாக ஏற்பாடுகள் செய்து, தஞ்சைப் பெரிய கோவிலின் சாயலில் சிறிய அளவில் சிறப்பாகக் கட்டி முடித்தான். இக்கோவிலில் சிவபெருமான் அரவ நீள்சடையான் என்ற பெயரில் சற்று உயரமாக லிங்க வடிவில் காட்சி தருகிறார். இக்கோவிலில் சிவன் அருள்பாலித்து வந்தாலும் சோழ மன்னன் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜகோவில் என்ற பெயரிலேயே பிரசித்தமாகி உள்ளது. இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜ கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவில் விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல் கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன. இறைவன் கருவறையில் மூன்றடி உயரத்திலும், நிலத்தினடியில் பதினெட்டடி புதைக்கப்பட்ட நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப்பார்த்து அருள்பாலித்து வருகிறார். மனம் நிறைந்த தூய உள்ளத்தால் பக்திப்பரவசம் கொண்டு லிங்க உருவில் அற்புதமாக அமைந்துள்ள இறைவன் அரவ நீள்சடையானை ஓம் நமசிவாய என்று இருகரம் கூப்பி வணங்கினால், லிங்க உருவில் இல்லாது, ஈசனே நேரில் வந்து நின்று அருள்பாலிப்பது போன்ற உணர்வு கிடைக்கும். பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வை அதிர்வலைகளால் உணரமுடியும் எனறும், நினைத்ததை வேண்டிப் பெறலாம் என்றும் சொல்லப் படுகிறது. கருவறையின் முன்பக்கமுள்ள அர்த்த மண்டபத்தில் இறைவனை நோக்கி நந்திசிலை அமைந்துள்ளது. பிரதோஷ பூசை இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இறைவன் சன்னதியைச் சுற்றிக் கோவிலுக்குள் சுற்றுப்பாதை உள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன், வலது பக்கமுள்ள மண்டபத்தில் வடகிழக்கில் அன்னையின் சன்னதி தெற்குப்பார்த்து உள்ளது. அழகும், அமைதியும் நிறைந்து, ஐஸ்வர்ய சொரூபியாய், அழைத்த குரலுக்கு ஓடிவந்து கேட்ட வரம் தரும் அன்னை, இறைவனை நோக்கிச் சற்றுத் தலைசரிந்து கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயர் தாங்கித் தெற்குப் பார்த்து அருள் பாலித்து வருகிறாள். கன்னிப்பெண்கள் திருமணம் வேண்டி வாரத்தில் ஒருநாள் என ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்து அம்பாளைத் தரிசித்து மனமுருகி வேண்டிக் கொண்டால், அம்பாளின் அருளால் திருமணம் விரைவில் கைகூடும் என்று கூறப்படுகிறது. கோவிலின் சுற்றுப் பகுதியில் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் சுப்பிரமணியரும் கிழக்குப்பார்த்துத் தனித்தனிச் சன்னதிகளில் அமைந்து அருள்புரிந்து வருகின்றனர். அம்பாள் சன்னதிக்கு மேல்பக்கம் புனித நீர் எடுக்க ஒரு கிணறு உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் வில்வமரம். அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்த்துப் பூசிக்கப் படுகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்புள்ள கொன்றை மரம் இக்கோவிலில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு. கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவாசலுக்கு வடபக்கம் நவக்கிரக சன்னதியும் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப் படுகிறது. இக்கோவிலின் வடக்குச் சுவரில் அதிகமான கல்வெட்டுக்கள் உள்ளன. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் இக்கோவில் சுந்தரசோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் ராஜேந்திரசோழ ஈஸ்வரமுடையார் கோவில் என்ற பெயரில் இருந்தது என்றும், சோழமாராயர் என்பவர் கோவிலுக்கு விளக்கெரிக்க நன்கொடை கொடுத்தார் என்றும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப் பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
This article was last modified 10 years ago