Enanallur sivan temple

India / Tamil Nadu / Valangaiman / Nachiyarkoil road
 Shiva temple  Add category

எயினனூர் எனும் இத் தலம் ஒரு தேவார வைப்பு தலம், தற்போது ஏனநல்லூர் என்றழைக்கப்படுகிறது. ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.


கும்பகோணம் -மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் செல்லலாம். அல்லது நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் மூன்று கி.மீ தொலைவில் உள்ளதால் திருவாரூர் சாலையிலும் வரலாம்.

ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். அந்த நாட்களில், சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பேர் இருந்தது. அரசர்கள் சேனாதிபதிக்கு ஏனாதிப்பட்டம் என்னும் ஓர் ஆபரணம் நெற்றியில் அணியத் தருவார்கள்.

அரசர்களுக்கும், அவருடைய படைவீரர்களுக்கும் வாள் பயிற்சி கற்றுதரும் வீரராக வாழ்ந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். மிகச்சிறப்பான பயிற்சி யின் மூலமாக முதன்மை பெற்று, நல்ல வரு மானமும் பெற்று வாழ்ந்தார், உயர்ந்த வீரம் உடைய இவர், திருநீற்றின் திருத்தொண்டில் அளவுகடந்த அன்புடன் வாழ்ந்து வந்தார்.

திருநீறு அணிந்த அடியவர் யாவராக இருந்தாலும், அவரை சிவமாக பாவித்து வணங்கும் பண்புடன் வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாள் பயிற்சியின் மூலமாக கிடைத்த வருமானம் முழுவதையும், திருநீறு அணிந்த அடியவர்க்கே பயன்படுத்தினார்.

இவரைப்போலவே, வாள் பயிற்சி அளித்து வரும் அதிசூரன் என்பவருக்கு, ஏனாதிநாத நாயனாரால் வருமானம் இழப்பு ஏற்பட்டது. தன்னைவிட அதிக வருமானம் ஈட்டும் ஏனாதி நாதரை வென்றுவிட்டால், தனக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற பொறாமை குணம் குடியேறியது. இதனால் தன்னுடம் துணைக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டுச் சென்று ஏனாதிநாயனாரை போருக்கு அழைத்தார். வீரம் மிகுந்த ஏனாதிநாயனார், யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியே போருக்குச் சென்றார். இதை அறிந்த அவருடைய வாள் பயிற்சி மாணவர்களும், சுற்றத்தினரும் அவருக்கு துணையாகச் சென்று இவர்களிடம் போரிட்டு வெற்றிபெற முடியாமல், அதிசூரன் தோற்று ஓடினான்.

போரிட்டு வெல்லமுடியாத அதிசூரன் அவரை சூழ்ச்சியால் வெல்ல நினைத்து உடலெங்கும் திருநீறு பூசி அடியவர் போல் வர ஏனாதி அவனை வணங்கினார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி கொன்றான்.

இறைவன் ஏனாதிக்கு பிறப்பிலா வாழ்வினை அளித்து தன்னுடன் ஐக்கியமாக்கிகொண்டார்.

இக் கோயிலில் ஏனாதிநாத நாயனாருக்குத் தனி சந்நிதி உள்ளது.

இவரது குருபூசை நாள் : புரட்டாசி - உத்திராடம்

இவ்வூரில் அமைந்துள்ள சிவாலயம் பிரம்மபுரீச்வர் திருக்கோயில். கிழக்கு நோக்கியது, ஐம்பது சென்ட் நிலபரப்பில் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் நடுத்தர அளவிலான லிங்கம், அம்பிகையும் அவ்வாறே உள்ளார்.

கருவறை கோட்டத்தில் சிறிய அளவிலான தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளனர்.

விநாயகர், முருகனுக்கு லட்சுமிக்கு தனி சிற்றாலயம் உள்ளது. வடகிழக்கில் அழகிய பைரவர் திருமேனி உள்ளது.

அருகில் ஏனாதி நாதர் தன் மனையாளுடன் உள்ளார். இவருக்கு புரட்டாசி உத்திராடம் நட்சத்திரத்தில் குருபூஜைகள் நடக்கும்.

பல நல்ல சிறப்புக்கள் கொண்ட இக்கோயிலுக்கு ஒரு கால பூசை மட்டுமே நடைபெறுகிறது.
காலை 11க்கு கோயிலில் இருந்தால் அர்ச்சகர் வருவார் ஒருமணிநேரம் இருந்துவிட்டு செல்கிறார்.

மருதா நல்லூர் குருக்களே இங்கும் பூசை செய்வதால் அங்கு தரிசனம் செய்யம்போது நேரம் அறிந்து கொண்டு இங்கு வரலாம்.
Nearby cities:
Coordinates:   10°55'2"N   79°25'36"E
This article was last modified 7 years ago