Kodiyalur sivan temple

India / Tamil Nadu / Peralam / Thirupamburam road
 Shiva temple  Add category
 Upload a photo

மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள பேரளத்திற்கு மேற்கே, திருமீயச்சூர் அடுத்த ஊராக கொடியலூர் அமைந்துள்ளது

திருமீயச்சூர் ,வருணனும் சூரியனும் பூஜை செய்து தங்கள் சாப நிவர்த்தி பெற்ற இடமாகும்.

சூரியனுடைய பத்தினிகளான உஷா தேவியும் அவளுடைய நிழலான சாயாதேவியும் மேகநாதரிடம் எங்களுக்கு பிள்ளைபேறு வேண்டும் என்று இறைஞ்சினர்.

அதற்கு இறைவன் நீங்கள் உங்கள் கணவரோடு திருமீயச்சூரிலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி அம்பாள் லலிதாவையும் என்னையும் பூஜை செய்தால் பலன் கிடைக்கும் என வரமளித்தார் அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி, மூவரும் பூஜை செய்தனர்.

சூரியனுக்கும் உஷாதேவிக்கும் எமதர்மனை ஜனிக்கும்படி செய்தார்.பின்னர் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சனீஸ்வர பகவானை ஜனிக்கும்படி அருள் செய்தார்.

சூரியன், உஷாதேவி ,சாயாதேவி,மூவரும் கூடிய இடம் திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கே உள்ள கூடியலூர் அதுவே காலபோக்கில் கொடியலூர் ஆயிற்று . இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

அகத்தியர்,கூடியலூர் என்ற இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூசை செய்தார். அதனால் இத்தல இறைவன் அகஸ்தீஸ்வரர் எனப்படுகிறார். இறைவியின் பெயர் ஆனந்த வல்லி.


கிழக்கு நோக்கிய சிவாலயம், ராஜகோபுரம் போன்ற சுதை வாயில் உள்ளது. அதனை கடந்து உள்ளே சென்றால் கருவறை வாயிலில்
தென்புறம் எமதர்மனும் வடபுறம் சனீஸ்வரர் பகவானும் அமைந்திருப்பது சிறப்பு.இருவரும் ஒருங்கே அவதரித்தத் தலம் என்பதால் இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி .

இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும் மரண பயத்தையும் நீக்கி அருளுகிறார்கள்.




சனி பகவானின் பிறந்த தளம் என்பதால் இங்கு வநது இத் தல இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்வித்து சனி பகவானை வணங்குவோருக்கு ஏழரை வருட பாதிப்பு என்பதே இல்லை.

சனிக்கிழமைகளில் நெய், எள் விளக்கேற்றுதல், எள் சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்க பெறலாம்.


பிரகாரத்தின் தென்புறம் நிற்கும் நிலையில் உள்ள ஒரு கல்வெட்டில் அழகப்பபிள்ளை என்பவர் 1909ஆம் ஆண்டு புதிதாய் நவகிரக சன்னதி உருவாக்கி அதற்க்கு மானியமாக 2.5ஏக்கர் நிலம் தந்துள்ள தகவலை காணலாம்.

தென்மேற்கில் விநாயகர், பாலசுப்ரமணியன், விஜயலட்சுமி ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன.

இக்கோயில் சண்டேசர் இதுவரை நான் பார்த்த கோயில்களில் மிக பெரியது (தஞ்சை, க.கொ.சோ.பு தவிர ). அது போல் பைரவரும் அழகான வேலைப்பாடு கொண்ட பெரிய உருவானவர்.

இதனை வைத்து இக்கோயில் முன்பு பெரிய சிவாலயமாக இருந்துள்ளது என அறியலாம். கருவறை

கோட்டங்களில் தென்முகன் மட்டும் உள்ளார்.

பல சிறப்புக்கள் கொண்ட கோயிலாக இருந்தாலும் ஒரு கால பூசை எனும் ஒற்றை நூல் கொண்டே தேரை இழுக்க வேண்டி உள்ளது. பூசைக்கு சிவாச்சாரியார் இல்லை. எனினும் அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட ஒருவர் நல்ல முறையில் பூசை செய்து வருகிறார்.
Nearby cities:
Coordinates:   10°57'43"N   79°38'29"E
This article was last modified 6 years ago