Sri Abivirutheeswarar Shiva Temple (Amthisvaram) | Shiva temple

India / Tamil Nadu / Koradacheri / Amthisvaram / sellur road
 temple, Shiva temple
 Upload a photo

திருவாரூர் மாவட்டம்,குடவாசல் வட்ட, அபிவிருத்தீஸ்வரம் சிவன்கோயில்
கொரடாச்செரியின் வடக்கில் மூன்று கிமி தூரத்திலுள்ளது அபிவிருத்தீஸ்வரம்.

கொரடாச்சேரியில் இருந்து வெட்டாற்றின் கிழக்கு கரையில் செல்லவேண்டும் , சிறிது தூரம் சென்றபின் கோயிலை தாண்டியிருப்போமோ என்ற ஐயம் எழுந்தது , Google mapsஐ பார்க்க இறைவனின் கோயில் அருகிருந்து "வாராய் நீ வாராய்" என அழைத்தது.

சொற்சுவைக்காக நான் சொன்னாலும் மேற்கண்ட திரைஇசை பாடலை எழுதியவர் இவ்வூர் கவிஞர் கா.மு. ஷெரீப் எனப்படும் கா.முகம்மது ஷெரீப் தான்.

வெட்டாற்றின் கரையில் இருந்து கீழிறங்கி சென்றால் தெருவின் கடைசியில் மேற்கு நோக்கிய கோயிலில் இவ்வூர் பெயருக்கு காரணமானவராகிய அபிவிருத்தீஸ்வர்ர் திருக்கோயில் உள்ளது. அக்காலத்தில் அபிமுக்தீஸ்வரர் என வழங்கப்பட்ட பெயர் ஏனோ காலபோக்கில் அபிவிருதீஸ்வரர் என மாறியுள்ளது. (மேற்கு முகமாக திரும்பியுள்ள சிவனுக்கு அபிமுகம் கொண்டவர் என பெயர்.)

ஒரு ஏக்கர் பரப்பில் இறைவன் கோயில் கொண்டுள்ள இடம் இறைவன் மேற்கு முகம் கொண்டும், அம்பிகை சௌந்தர்யநாயகி தென்முகம் கொண்டும் உள்ளனர்.

அழகான சோழர்கால கருங்கல் கட்டுமானம் கொண்ட கருவறை. பதினொன்றாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம். இறைவன் இறைவி இருவரது கருவறைகளையும் இணைக்கிறது புதிய கான்கிரீட் மண்டபம், இதில் பெரிய தென்முகன் சிலை ஒன்றும், பைரவர், சூரியன், இரு விநாயகர்கள், பாலமுருகன், பெரிய விநாயகர், லிங்கம் ஒன்றும் உள்ளது.

கருவறை தென்புற சுவற்றில் லிங்கத்தினை மார்கண்டேயர் கட்டியணைப்பது போன்ற சிற்பம் உள்ளது ஏன்? கருவறை சுவற்றில் சில குறியீடுகள் சொல்வது என்ன? விடை தெரியா கேள்விகள்.

விருத்தாசுரனை அழிக்க இயலாத இந்திரன் என்ன செய்வதென்று அறியாமல் விழிக்க ததீசி முனிவர் தனது முதுகெலும்பால் ஆன வஜ்ராயுதம் தயார் செய்து அவனை அழிக்கலாம் என கூறி தான் உயிர்விட்டு தனது முதுகெலும்பினை தருகிறார். அதனை கொண்டு விருத்தாசுரனை இந்திரன் அழிக்கிறான்.

ஆயினும் இந்திரனை முனிவரைகொன்ற பாவம் பீடிக்கிறது, அதில் இருந்து விடுபட இந்திரன் இத்தல அபிவிருதீச்வரரை வணங்கினான்

அருகில் உள்ள கொள்ளம்புதூரில் உள்ள இறைவனை பாடி பரவிய சம்பந்த பெருமான் பின்னர் இந்த வெட்டாற்றின் கரையிலே சென்று திருவிடைவாசல் செல்கிறார். அப்போது இக்கோயிலுக்கு வராமல் வெட்டாற்றின் கரையில் இருந்தே இக்கோயில் இறைவனை பற்றி பாடியதாக சொல்லப்படுகிறது. எனினும் பாடல் ஏதும் கிடைக்கபெறவில்லை.

இது சூரியன் வழிபட்ட தலம் ஆதலால் இத்தல இறைவனின் மேல் பங்குனி 1-தேதி மாலை 5.55க்கு சூரிய ஒளிக் கிரணங்கள் வீழ்ந்து வணங்குவதை காணலாம்.

கோயிலும் ஊரும் அபிவிருத்தி என இருப்பதால் இவ்வூர் இறைவனை வணங்கி தொழில் அபிவிருத்தி, தான்ய அபிவிருத்தி, சந்தான அபிவிருத்தி அடையலாம்.
Nearby cities:
Coordinates:   10°47'43"N   79°28'30"E
This article was last modified 5 years ago