Sree Swayambunatha Swami Temple , Thiruvilayattam. (Thiruvilayattam) | Shiva temple

India / Tamil Nadu / Tharangambadi / Thiruvilayattam / Sembonarkoil - thiruvilaiyattam road
 Shiva temple  Add category

MdKT - sree suyambunAtha swAmy temple, thiruviLaiyAttam is one of the 72 mAdak kovil temples built by king sree kOtchengat chOzhan.
மயிலாடுதுறையின் கிழக்கில் 13கிமி தூரத்திலும்,செம்பனார்கோயிலின் தெற்கில் ஏழு கிமி தூரத்திலும் உள்ளது திருவிளையாட்டம்.
பிரதான சாலையின் மேற்கில் உள்ளது இவ்வாலயம்.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்று.. கிழக்கு நோக்கிய கோயில் எதிரில் பெரியதொரு குளம் உள்ளது. அதனை கடந்து சென்றால் சுதை வளைவு ஒன்று வரவேற்கிறது,அதன் எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது கொடிமரம் இருந்த அடையாளம் உள்ளது.

உள்ளே நுழைந்தால் சிறிய சிற்றாலயத்தில் விநாயகர் வரவேற்கிறார். இடதுபுறம் மாடக்கோயிலின் மேல் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. அதில் தென் புறம் நோக்கி சில படிகள் ஏறி பின் மேற்கு நோக்கி 12 படிக்கட்டுகள் ஏறி மேல் மட்டம் அடைந்தால் எதிரில் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது

முற்காலத்தில் இப்பகுதி முழுவதும் பெருங்காடுகளாக விளங்கின. ஆலயம் அமைந்துள்ள பகுதி முல்லை வனமாக இருந்துள்ளது. அப்போது வேட்டைக்காரர் களுடன் வந்த சோழமன்னன், அவர்களைப் பிரிந்து தனியாக குதிரைமேல் வந்தான். ஓரிடத்தில் குதிரையின் குளம்படி பட்டு ரத்தம் பீறிட்டது. திகைத்த மன்னன் குதிரையைவிட்டு இறங்கிப் பார்க்க, அங்கே சிவலிங்கத்தைக் கண்டான். உடனே மூலிகைகளை சிவலிங்கத்தின்மேல் பிழிந்து வைத்து ரத்தம் பீறிடுவதை நிறுத்தினான். இதற்குள் அரசனின் பணியாட்கள் அரசனைத் தேடிக்கொண்டு அவ்விடத்தில் வந்துசேர்ந்தனர். அரசன் சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்று தலைநகரில் கோவில் அமைக்க முடிவு செய்தான். பணியாட்கள் உதவியுடன் சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க பூமியைத் தோண்ட, சிவலிங்கம் பெருமுளையாக வளர்ந்துகொண்டே இருந்தது. இறைவனின் திருவுள்ளத்தை அறிந்து, அந்த இடத்திலேயே கோவில் அமைத்தான்.

இறைவன் தானாக முளைத்தெழுந்தவர். பெருமுளையாகத் தோன்றியதால் பெருமுளை என்றே இவ்வூர் அழைக்கப்பட்டது. பழைய பதிவேடுகளில் பெருமுலை என்று காணப் படுகிறது.

வேட்டையாடும் இடத்தில் ஈசன் திருவிளையாடல் புரிந்ததால் இவ்வூர் திருவிளையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வூரின் மேற்குப் பக்கத்தில் கஸ்தூரிரங்கப் பெருமாள் கோவிலும், அதனருகே அய்யனார் கோவிலும் உள்ளன. இதன் பின்னணியிலும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. முற்காலத்தில், பூம்புகாரில் ஆண்டுதோறும் இந்திர விழா நடக்கும். அதற்கு தஞ்சையிலிருந்து யானைகளை அனுப்பி வைப்பது சோழ மன்னனின் வழக்கம். அவ்வாறு ஒருமுறை 14 யானைகளோடு வந்த பாகர்கள், அன்றிரவு இப்பகுதியில் தங்கினர். நள்ளிரவில் யானைகள் அருகிலிருந்த தாமரைக்குளத்தில் இறங்கி அதை நாசம் செய்துவிட்டன. அதைக்கண்டு கோபம்கொண்ட பெருமாள், யானைகளுக்கு பார்வை தெரியாமல் செய்துவிட்டார். விடிந்ததும் பாகர்கள் யானைகளை அழைத்துச்செல்ல முற்பட்டபோது, அவை பார்வை தெரியாமல் தடுமாறுவதைக் கண்டு திடுக்கிட்டனர். இந்த விவரம் மன்னனுக்குத் தெரிந்தால் அரச தண்டனைக்கு ஆளாகவேண்டுமே என்று அஞ்சினர்.

அப்போது அவர்கள் பார்வையில் அய்யனார் கோவில் தென்பட, அங்கு சென்று மனமுருகப் பிரார்த்தித்தனர். அய்யனாரின் அருளால் யானைகள் மீண்டும் பார்வை பெற்று, அருகிலிருந்த இன்னொரு குளத்தின் வழியாகக் கரையேறின.

இந்த சம்பவத்தின் அடிப்படையில், இங்குள்ள கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆனைகுத்திப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். யானைகள் நாசம் செய்த குளம் "யானை படுத்தான் குளம்' என்றும்; கரையேறிய குளம் "ஆனையேறிய குளம்' என்றும் அழைக்கப்படுகின்றன. யானைப் பாகர்கள் அய்யனாருக்கு நன்றி செலுத்த 14 கல் யானைகளைப் பிரதிஷ்டை செய்தனர். அவற்றை இன்றும் காணலாம். இவையெல்லாம் இத்தல ஈசனின் திருவிளையாடலே.

அய்யனாரின் பிறப்பிடம் வழுவூர். இதை நினைவுபடுத்தும் வகையில் இத்தல ஈசனின் மூலவிமான வடக்குப் பகுதியில் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தியின் சுதைச்சிற்பம் உள்ளது. மேலும் ஈசனின் விமானம் கஜப் பிருஷ்ட விமானம் ஆகும். (யானையின் பின்பகுதியைப் போன்ற அமைப்பு.) அந்த விமானத்தின் தெற்குப்பகுதியில் தட்சிணாமூர்த்தியின் சுதைச் சிற்பமும், மேற்குப் பகுதியில் அனந்தசயனக் கோலத்தில் பெருமாளின் சுதைச் சிற்பமும் அழகுற அமைந்துள்ளன. சிவன் கோவிலின் மூலவிமானத்தில் பெருமாள் இருப்பது சிறப்பம்சமாகும்.

மாடக்கோயிலின் மைய மண்டப வாயிலில் விநாயகர் அமர்ந்துள்ளார். அவரை கடந்து உள்ளே நுழைந்தால் அழகிய பெரிய லிங்க மூர்த்தியாய் இறைவன் சுயம்புநாதர் வீற்றிருக்கிறார்.

கருவறை சுற்றிவர சிறிய பிரகாரம் உள்ளது கருவறை இறைவன் மீது காலை கதிரவனின் ஒளிக்கிரணங்கள் விழுமாறு கட்டப்பட்டுள்ளது. ((சமீப காலத்தில் கட்டப்பட்ட சுதை நுழைவாயில் அவ்வொளியினை மறைக்கிறது, பழமையான கட்டுமானங்களை ஊடறுத்து கட்டும்போது கவனம் வேண்டும்))

. கருவறை மாடத்தில் தென்முகன், லிங்கோத்பவர், நான்முகன், துர்க்கை உள்ளனர். விமானத்தில் தென்புறம் தென்முகன் சுதையும், மேற்கில் திருமால் அமர்ந்த கோலமும், . வடக்கில் கஜசம்ஹாரமூர்த்தி சுதை காணப்படுகிறது. பிரம்மனுக்கு மேல் எதற்க்காக கஜசம்ஹாரமூர்த்தி சுதை காட்டியுள்ளனர் என அறியக்கூடவில்லை.

தரை தள பிரகாரத்தில் விநாயகர், முருகன் சிற்றாலயங்களும், மகாலட்சுமி சிற்றாலயமும் உள்ளன. ஜேஷ்டா தேவியின் சிலை ஒன்றும் சிறிய மாடத்தில் வைத்துள்ளனர். மாடகோயிலின் தரைதள கோட்டத்தில் தென்முகன் சன்னதி, லிங்கோத்பவர், பிரம்மன் உள்ளனர் சண்டேசர் தனி கோயில் கொண்டுள்ளார். தென்முகனுக்கு அருகில் உள்ள சுவர்களில் நிவந்தங்கள் கொடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

இந்த பெரிய மாடகோயிலின் வடபுறம் அதாவது இறைவனின் இடதுபுறத்தில் அம்பிகை கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். பெரிதான அர்த்தமண்டபம் கருவறை அம்பிகைக்கு உள்ளது. அதனை ஒட்டி கொலுமண்டபம் பெரிதாய் உள்ளது.

முல்லைவனத்தில், முல்லைபூவடிவில் அம்பாள் இறைவனை வழிபட்டதால் முல்லைவன நாயகி என்றும்; இவ்விடம் ஆதியில் முல்லையூர், திருமுல்லையூர் என்று திகழ்ந்ததாகவும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

இந்திரன் தன் மனைவியோடு இவ்வூருக்கு வந்து இறைவன் அருள் பெற்றதாகவும்; சுயம்புநாதன் தன்னை வணங்குபவர்களை ஓராயிரம் ஆண்டுகாலம் வாழ அருள்பாலிக்கிறார்
சுயம்புநாதருக்கு நெல்லி, முள்ளிப்பொடியால் வில்வ இலைகளைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நாட்பட்ட வியாதிகள் நீங்கும்.

எத்தனை சிறப்புக்கள் இருந்தென்ன?? போதுமான வருமானம் இல்லாததால் குருக்கள் அதிக நேரம் இருப்பதில்லை, பிரதோஷம் சதூர்த்தி போன்ற மாத விழாக்கள் மட்டுமே கோயிலை உயிரை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.


அன்பர்களே உழவார பணிகள் செய்ய வாரீர். பிரதான சாலையில் விளம்பர பலகை வைக்க அருகாமை நகரத்தில் (செம்பனார்கோயில், தரங்கம்பாடி, மயிலாடுதுறை) இருக்கும் வணிகர்கள் உதவுங்கள்



மயிலாடுதுறை -தரங்கம்பாடி, காரைக்கால் செல்வோர் இவ்வழியே தான் செல்ல வேண்டும் இது போன்ற பழம் பெரும் கோயில்களை நீங்கள் தரிசனம் செய்வதால் உங்கள் வாழ்வு மட்டுமல்லாது கோயிலை நம்பி வாழ்வோரும் பலனடைவர் என்பது திண்ணம்.
Nearby cities:
Coordinates:   11°2'6"N   79°44'9"E
This article was last modified 4 years ago