ATHEESHWARA PERIYANAYAKI AMMAN TEMPLE, PERIYAKALANDAI.

India / Tamil Nadu / Periyanegamam /
 Upload a photo

THIS TEMPLE WAS MANY MORE YEARS OLD.AND THIS GOD OF SIVALINGAM SUYAMBULINGAM.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெரியகளந்தை. இங்கு அமைந்துள்ள ஆதீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள இறைவன் ஆதீஸ்வரர், ஆதிசேஸ்வரன், ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பொள்ளாச்சி- திருப்பூர் சாலையில் காட்டம்பட்டி என்ற ஊரில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இந்த கோவில் தலத்தை அடையலாம்.

ஈசனை காணவில்லை....... இந்த ஆலயத்தில் தங்கியிருந்த புலவர் ஒருவர் தினமும் சிவனைக் குறித்து பாடல் பாடி, அதற்கு பரிசாக பொற்காசுகளை பெற்று ஜீவனம் நடத்தி வந்தார். அவரது பாடலுக்கு பொற்காசுகள் கொடுக்கப்பட்டாலும், அவர் அதற்கென்று இறைவனை பாடியவர் இல்லை. அவனே கதி என்ற சரணாகதியால்தான் அவரின் பாடல்கள் தினமும் தொடர்ந்து கொண்டிருந்தது.

அந்த புலவர் படிக்காசு புலவர் என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை ஆலயத்தில் இறைவனின் சன்னதி முன்பு நின்று ஈசனை நினைத்து மனமுருக வேண்டி பாடிக்கொண்டிருந்தார் படிக்காசு புலவர். எவ்வளவு நேரம் இப்படியே பாடிக்கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை. சில மணி நேரத்திற்கு பிறகு அவர் கண் திறந்து பார்த்தபோது அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் மூர்ச்சையாகி விடுவார் போல் தோன்றியது.

பக்தனுக்கு உதவிய நந்தி.......... காரணம், ஆலயத்தில் இருந்த உலகையாளும் ஈசனையும், உமையம்மாளையும் காணவில்லை. இறைவன் நடத்திய திருவிளையாடல்கள் பல. அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்ற எண்ணம் பின்னால் அவருக்கு ஏற்பட்டது.

அவனடி சேரும் பக்தர்களை சோதித்து பார்ப்பதன் மூலம் விளையாட்டை நடத்தினாலும், அதில் தன்னுடன் சேர்த்து தனது பக்தனையும் வெற்றிபெற வைப்பதே அந்த ஈசனின் செயல் என்பதை படிக்காசு புலவர் உணர்ந்திருந்தார். 'இப்போது இறைவனை கண்டுபிடிக்க வேண்டுமே என்ன செய்வது?' என்று எண்ணிய படிக்காசு புலவர், சுவாமி சன்னதிக்கு முன்பாக இருந்த நந்தி தேவரிடம் முறையிடத் தொடங்கினார்.

தனது பாடல் வாயிலாக 'இறைவன் எங்கே?' என்று கேட்டார். அவர் மீது பரிவு காட்டும் விதமாக நந்தி தேவரும், சிவன் மறைந்திருந்த திசையை நோக்கி தனது தலையை திருப்பி அடையாளம் காட்டி விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் இருந்து விட்டார்.

நந்தியிடம் வேண்டுங்கள்............ அனைத்தும் அறிந்தவர், நந்திதேவர் தலையை அசைத்ததை மட்டும் அறியாமல் இருப்பாரா என்ன?. ஏன் இப்படி காட்டிக்கொடுத்தாய் என்று நந்தியை கடிந்து கொண்டார் ஈசன். அதற்கு நந்திதேவர், 'ஐயனே! காட்டிக்கொடுக்கும் எண்ணம் எனக்கில்லை. இருப்பினும், உங்களின் பக்தன் ஒருவர் கஷ்டப்படுவதை நான் எப்படி சகித்துக் கொண்டு இருக்க முடியும்.

அதனால்தான் அவ்வாறு செய்து விட்டேன். என் பிழையை பொறுத்தருள வேண்டும்' என்றார். தன் பக்தன் மீது நந்திதேவர் கொண்ட கருணையை எண்ணி அகமகிழ்ந்தார் ஈசன். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையானது சிவனை நோக்கி நேராக இல்லாமல், இடப்புறம் தலையை திரும்பியபடி இருக்கும். இவரை வணங்கினால், சிவனிடம் சிபாரிசு செய்து பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பார் என்பது இங்கு வந்து பலன் பெற்று சென்ற பக்தர்களின் சான்று.

நந்தி வாகனத்தில் பார்வதி..... துர்வாச முனிவருக்கு யாக குண்டத்தில் கிடைத்தவர் இத்தல அம்பாள். இவர் வளர்ந்ததும் ஆதீஸ்வரரை திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு வந்தபோது அங்கு நந்தி தேவர் தலையை திருப்பியபடி இருப்பதை பார்த்தார். இதற்கான காரணத்தைக் கேட்டபோது, தன் கணவரின் இருப்பிடத்தை ஒரு பக்தனுக்காக காட்டி கொடுத்ததால் இப்படி இருப்பதாக கேள்வியுற்றார்.

இதையடுத்து நந்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அம்பாள், அந்த நந்தியின் மீது அமர்ந்தார். ஐயனுக்கு வாகனமாக இருந்து வந்த நந்திதேவர், இந்த தலத்தில் அம்பாளுக்கும் வாகனமாக மாறிப்போனதில் மகிழ்வடைந்தார்.

பெரியநாயகி அம்மன்........ இந்த கோவிலில் உள்ள அம்மன் பெரிய நாயகி என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் துர்வாச முனிவர் பல காலம் யாகம் செய்து வந்துள்ளார். அப்போது யாகத்தின் மூலம் அம்பாளை குழந்தை வடிவில் பெற்றார். பின்னர் அம்பாள் கன்னிப்பருவம் அடைந்ததும், ஆதீஸ்வரருக்கு மணம் முடித்து வைத்தார்.

மேலும் பெரியநாயகி அம்மனை துர்வாச முனிவரே இங்கு பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. படைப்புத் தொழிலை செய்வதால், தான்தான் அனைத்திலும் உயர்ந்தவன் என்ற எண்ணம் தோன்றியதால் பிரம்மதேவர் சாபத்திற்கு ஆளானார். அந்த சாபம் நீங்குவதற்காக அவர் பூலோகத்தில் பல இடங்களுக்கு சென்று சிவனை வணங்கிவந்தார்.

அதன் ஒரு பகுதியாக சந்தன மரங்கள் நிறைந்த பெரியகளந்தைக்கு வந்தபோது சுயம்பு வடிவில் இருந்த சிவனை கண்டு வணங்கி சாப விமோசனம் பெற்றார். பிற்காலத்தில் இந்த இடத்தில் கரிகால் சோழன் கோவில் எழுப்பினான் என்று தல வரலாறு கூறுகிறது.

பிற தெய்வங்கள்......... சுயம்பு மூர்த்தியாக உள்ள ஆதீஸ்வரரின் கருவறைக்கு கீழ் பகுதியில் சுனை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. பெரியநாயகி அம்பாள் சன்னிதியில் பிரசாதத்துடன் வெள்ளைக்கயிறு வழங்கப்படுகிறது. இதனை கட்டிக்கொண்டால் நோய்கள் வராது என்பது நம்பிக்கையாகும். சுவாமிக்கு அபிஷேகம், அம்பாளுக்கு மஞ்சள் கயிறு கட்டி, செவ்வரளியால் பூஜை செய்து வழிபட்டால் திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும்.

இந்த தலத்து சிவபெருமானை இந்திரன், பிரம்மா, சூரியன், வாலி, அகத்தியர், பதஞ்சலி முனிவர், சுந்தரானந்தர் உள்பட பலர் வழிபட்டுள்ளனர். பதஞ்சலி முனிவர் தவம் செய்த இடத்தில் கல் கம்பம் ஒன்று அமையப்பெற்றுள்ளது. சிவனுக்கு இடது பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

வள்ளி தனது கழுத்தை வலதுபுறம் சாய்த்தபடி காட்சி தருவது சிறப்பானது. பிரகாரத்தில் சனீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பாலகணபதி தல விநாயகராக அருள்பாலிக்கிறார்.
Nearby cities:
Coordinates:   10°48'50"N   77°7'59"E
This article was last modified 11 years ago